📖 ஆலய வரலாறு
🔹 தென்னூர் பங்கின் ஆலயம்:
தென்னூரில் அமைந்த ஆலயம் மனிதர்கள் தங்களை மறுஆய்வு செய்யவும் தங்கள் திருவருள் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். கடவுள் மனித உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் ஆலயம் உறவுப்பாலமாய் இருக்கிறது என்பதற்கு வழிபாட்டில் பங்கெடுக்கும் இறைமக்களே சான்றாவர்.
🔹 ஆலயமாற்றத்தில் ஆன்றோர்கள் மற்றும் அருள்குருக்கள்:
தென்னூரின் ஆலயமாற்றத்திற்காக ஆன்றோர்களும், அருள்குருக்களும் தம் பங்களிப்பை,பணியை, உழைப்பை தந்துள்ளனர். தென்னூரில் கூரை கோயில் அமைந்த வரலாறு சுய மரியாதை தேடிய கோபத்தினால் உருவானது. தென்னூர் மக்களின் வருகையை விரும்பாத சிலரிடம் வெறுப்புற்று தொண்டைமான் குடும்பத்தினர் காப்ரி வகையறா குடும்ப இடத்திலிருந்த கொள்ளுக் கொடியை எடுத்து விட்டு திருச்சிலுவையை நாட்டி கூரை கொட்டகை அமைத்துள்ளனர். இதுவே இம் மாபெரும் திருஅவையில் தென்னூர் தனிபங்காகவும் விண்ணைத் தொடும் கோபுர ஆலயம் அமையவும் காரணணமான காலத்தால் தக்க நேரத்தில் விதைக்கப்பட்ட வித்தாகும். இதுவே திருஅவையில் தென்னூர் அங்கம்வகிக்க திருவழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயமாகும்.புதுவை அப்.விக்கர் பொன்னான் ஆயர் காலத்தில் 1857 ஆம் ஆண்டில் ஆலயம் 500 பேர் அமரக்கூடிய மணகோயிலாகவும், அருள்தந்தையர் இல்லம் கல்கட்ட்டமாக அமைக்கப்பட்டது அடுத்த ஆலயம். புதுவை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு. பிரான்சிசு சியன் மொரேல் லயுனேன் 1868 முதல் 1892 வரை பணியாற்றிய காலத்தில் தென்னூர் பங்கில் 1874 ல் ஆரம்பித்து 1886 ஆம் ஆண்டு வரை கோயில் (பழைய கோயில். தற்போது முன்பகுதி ) கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 12 வருடங்கள் கோயில் பணி நடைபெற்றுள்ளது. கோயில் கட்டுமானப்பணி முடியும் வரை அருள்தந்தை. நிக்கோலாசு அடிகள் பங்குப் பணியாளராகப் பணியாற்றியுள்ளார். அக்கோயில் விண்ணிலிருந்து பார்க்கும் பார்வைக்கு திருச்சிலுவை வடிவ அமைப்பில் மணல், கண்ணாம்பு, கடுக்காய் மற்றும் முட்டை போன்ற மூலப்பொருட்கள் கொண்டு செக்கில் போட்டு மாவாக்கி புளிப்பேற்றி ஊறவைத்து கட்டி அமைக்கப்பட்டது அடுத்த ஆலயம்.இறைவனைத் தரிசிக்க இடப்புறம் வலப்புறம் எனும் இடஅமைப்பை அகற்றி மக்கள் சிரமமின்றி நிறைவாய் அன்னையிடம் அருள் வரங்களை பெற்றிட அனைவரும் அமர்ந்திடும் ஆலயம் அமைத்து அனைவரின் மனதிலும் அழியாத அகலாத அசைக்கமுடியாத இடம் பெற்றிருப்பதில் அருளதந்தையவர்களின் ஆலயம் எழுப்புதல் பணி நிறைவாய் முடிவுபெற்ற சான்றாகும். மக்களின் மன்றாட்டுகளை மாதாவிடமும் அவர் மகன் இயேசுவிடமும் எடுத்துச்சொல்ல பாகுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறைவனை முகம் முகமாய் தரிசித்து வழிபாடுகளில் தற்போது பங்கேற்கும் (பழைய முன்பகுதியோடு தற்போதைய பின்பகுதியை இணைத்து) புதிய கோயிலை கட்டியவர் அருளதந்தை. எம்.தனிசுளாசு அடிகளார் ஆவார்.கும்பகோணம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு. அந்தோணிசாமி பிரான்சிசு ஆண்டகை காலத்தில் 2015 இல் ஆரம்பித்து 2017 ஆம் ஆண்டு வரை பணிகள் தொடர்ந்து நடைபெற்று கோயில் புதுப்பிக்கப்பட்டது. புத்தம் புதியதாய், வண்ணமயமாய், வானத்து வானவில் மழையில் கரைந்ததுவோ என காண்போர வியந்திட வானவில் தான் செங்குத்தாய் கோபுரம் கொண்டதென நினைத்திட, மண்ணில் வசிக்கும் மாந்தர்கள் இரசனை இரசம் தடவி மென்மையான தூரிகையால் வண்ணம் தீட்டி வரைந்த இந்த ஆலயத்தின் வனப்பில் இமைகள் சற்று விரிவடையத்தான் செய்யும் காரணர்கள் இவர்கள் என்றால் கரங்களை கூப்பி வணங்கத்தான் செய்யும். சிறப்பாக இன்றும் பிரமிப்பும் அழகும் மிளிரும் வகையில் அமையப்பட்ட ஆலயத்தினை மாற்றி அமைத்திட திட்டமிட்டு மக்களை ஒருங்கிணைத்து பங்கு மக்கள், கொடையாளர்கள், உதவிசெய்த(ப)வர்கள் என அனைவரையும் ஒன்று சேரத்து ஒய்யார அழகினில் ஆலயத்தை புதுப்பித்தவர் அருள்தந்தை.எம். செல்வராசு அடிகளார் ஆவார். இந்த பொலிவிற்கு அருள் தந்து பொருள் தந்து ஆலயப்பணியில் உதவிய அனைவரும் நினைவின் பக்கங்களில் நன்றியின் உணர்வால் என்றென்றும் வணங்கப்படக்கூடியவர்கள் ஆவார்கள். தற்போது பொலிவுறும் இவ்வாலயம் காலவளர்ச்சியில் மக்களின் ஆன்மீக முதிரச்சியில் அடுத்த நிலையைச் சந்திக்கலாம்.
🔹 தென்னூர் ஆலயம் அமைப்பு:
ஆலயத்தின் வெளிப்புறம்:
புதுவை அப்.விக்கர் பொன்னான் ஆயர் காலத்தில் கி.பி 1857 ஆம் ஆண்டில் ஆலயம் 500 பேர் அமரக்கூடிய மண்கோயிலாக இருந்த ஆலயம் புதுவை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு. பிரான்சிசு சியன் மொரேல் லயுனேன் 1868 முதல் 1892 வரை பணியாற்றிய காலத்தில் தென்னூர் பங்கில் கி.பி 1874 ல் ஆரம்பித்து கி.பி. 1886 ஆம் ஆண்டு வரை கோயில் (பழைய கோயில்) கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 12 வருடங்கள் கோயில் பணி நடைபெற்றுள்ளது. கோயில் கட்டுமானப்பணி முடியும் வரை அருள்தந்தை. நிக்கோலாசு அடிகள் பங்குப் பணியாளராகப் பணியாற்றியுள்ளார். அக்கோயில் விண்ணிலிருந்து பார்க்கும் பார்வைக்கு திருச்சிலுவை அமைப்பில் கட்டி அமைக்கப்பட்டது. பிறகு இக்கோயில் காலத்தேவையை கருத்தில் கொண்டு கும்பகோணம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு. பீட்டர் ரெமிசியுசு ஆண்டகை பணியாற்றிய காலத்தில் அவரின் அருளாலும் ஆசியாலும் அனுமதியாலும் அருளதந்தை.தனிஸ்லாசு அவர்கள் காலத்தில் அவரது முயற்சியாலும் மக்களின் உதவியாலும் கி.பி 1997 ல் ஆரம்பித்து கி.பி. 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் புதிய கோயில் (தற்போது பீடம் உள்ள கோயில்) கட்டி முடிக்கப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது ஆலயம் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பில் உயர் கோபுரங்களோடு 150 அடி நீளம் 20 அடி அகலத்தில் முன்னும் பின்னும் 4 என 8 கோபுரங்களும் வடதென் திசைகளில் 2 என 4 கோபுரங்களும் மொத்தம் 12 கோபுரங்களுடன் இயேசுகிறிஸ்துவின் சீடர்களை அடையாளப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கோபுரம் விண்ணகப்பயணத்தில் நம் வாழ்வு இறைவனை நோக்கியதாக அமைய உயர் கோபுரமாக அமைக்கப்பட்டுள்ளது. நற்கருணை ஆராதனைக்கூடம் அருள்தந்தை வி.ஐ.பீட்டர் அவர்களின் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. குளீரூட்டப்பட்ட அக்கூடம் ஆலயத்தின் ஒருபகுதியாக தென் திசையில் மக்களின் செபத்தேவைக்காக அமைந்துள்ளது. மக்கள் விசுவசிக்கும் புனிதர்களான புனித அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் பீடங்கள் ஆலயத்தின் இருபுறமும் மக்களின் செபத்தேவைகளுக்காகவும் ஆராதனைக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின்உட்புறம்:
கும்பகோணம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு. அந்தோனிசாமி பிரான்சிசு ஆண்டகை காலத்தில் கி.பி 2015 ல் ஆரம்பித்து கி.பி. 2017 ஆம் ஆண்டு வரை பணிகள் தொடர்ந்து நடைபெற்று பங்குத்தந்தை. ம.செல்வராசு அவர்கள் காலத்தில் கோயில் புதுப்பிக்கப்பட்டது. பளபளக்கும் பளிங்குகற்கள் பதிக்கப்பட்டு சுமார் 5000க்கும் மேற்பட்டோர் அமர்ந்து திருவழிபாடுகளில் பக்தியுடன் பங்கெடுக்ககூடிய வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு வாயில்களும், ஒரு நிலைவாயிலும், இருபதுசன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. இறைவனை நேர்முகமாய் தரிசிக்க திருப்பலி பீடம் மற்றும் நற்கருணை பேழை சிலுவையில் உயிர்விட்ட இயேசுவின் திருச்சிலுவைப்பாட்டின் அடையாளச்சிலுவையோடு பீடத்தின் இருபக்கமும் சூசையப்பர், மரியாள் திருச்சுரூபமும் கண்கவரும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பதினெட்டு தூண்கள் ஆலயத்தை தூக்கி சுமப்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னூர் ஆலயத்தில் இந்தியப்புனிதர் புனித. அல்போன்சம்மாளின் திருப்பண்டமானது அவரது வாழ்ந்த மண்ணில்(கேரளா) இருந்து கும்பகோணம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு.அந்தோனிசாமி பிரான்சிசு ஆண்டகை அவர்களால் வரவழைக்கப்பட்டது. அத்திருப்பண்டத்தை 2017 ஜனவரி மாதம் 28 ஆம் நாள் மாலை 6.00 மணியளவில் பீடத்தில் வைத்து புனிதம் தங்கும் இடமாக ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு அருள் வழங்கும் தந்தையின் செபவீடாக புனிதர்களின் மன்றாட்டுகளோடும் மக்களின் நன்றிச்செபங்களோடும் அருள்தந்தையர்களின் இறைவேண்டுதல்களோடும் தந்தை கடவுளின் அருளாசீர் பெற மக்களுக்காக அர்பணிக்கப்பட்டது. இறைமக்கள் தங்கள் வணக்கத்தை செலுத்தும் விதமாக அம்புகள் சுமக்க தலை சாய்த்தவாறு படுத்திருக்கும் புனித செபத்தியார்திருசுரூபம், குழந்தை இயேசு, இந்தியாவில் கிறிஸ்தவம் வளர காரணமாக இருந்த புனித சவேரியார், அன்னை மரியாள், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா என சுரூபங்கள் அமைக்கப்பட்டு மக்களால் வணக்கமும் முத்தியும் செய்து ஆராதிக்கப்படுகிறது.
🔹தென்னூர் ஆலயம் சிறப்பு:
கி.பி 1874 ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் அந்த காலத்திலேயே ஆலயம் விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு ஏற்ப இடம் முன்பும் பின்பும் விட்டுக்கட்டப்பட்டுள்ளது சிறப்பானதாகும். புனிதம் பரப்பும் சான்றுகளான சப்பரங்கள் (தேர்கள்), புனிதக்கொடிகள் பவனி வர அமைந்துள்ள தேரோடும் வீதி ஆலயத்தை சுற்றி தென்னூரில் அமைந்திருப்பது வேறெங்கும் அமைந்திராத சிறப்புகளில் ஒன்றாகும். பிரெஞ்சுகாரர்களின் பாதுகாப்பில் மறைப்பணித்தளமாக இருந்த தென்னூரில் பிரெஞ்சுக் கட்டிடக்கலை நுட்பத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது, கலைநயத்தின் கண் கவர் வித்தகமாகும். இடையூறுகளின்றி வசதியாக மக்கள் சிறப்புவழிபாடுகளில் பங்கெடுக்க மக்கள் மன்றம், வாசகப்பா மேடை அதன் அருகில் லூர்து அன்னை காட்சியருளிய ஞாபகத்தின் கெபி, கொடி மரம் என அமைந்துள்ளது.
🔹மாதா சுரூபத்தின் மகிமை:
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழ்ந்த அந்த காலத்தில் திருச்சபையின் பாதுகாவலியான இயேசுவின் தாய் அன்னை மரியாளை கொண்டு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரான்சு தேசத்தின் லூர்து நகரில் பொ்னது என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்த கன்னி மரியாளை (மாதாவை) தென்னூரின் பாதுகாவலியாக தேர்ந்துகொண்டார்கள். தென்னூரில் அருளாட்சி செய்யும் அன்னையின் திருவுருவம் ஆனது இயேசு சபை குருக்களால் பிரான்சு நாட்டில் இருந்து கி.பி. 1877 ஆம் ஆண்டு பேராயர் மோரெல் லவூயெணான் அவர்களின் காலத்தில் லூர்து மலையில் அன்னை மரியாளால் காட்சி வரம் பெற்ற பெர்னதெத் அவர்களின் தூரத்து உறவினரான அருள்திரு. தார்ப்ஸ் ஷான் அல்போன்ஸ் அடிகளார் என்ற இயேசு சபை குருவானவரின் உதவியால் பிரான்சு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மூன்று (3) சுருபங்களில் ஒன்று ஆகும். தென்னூர் பங்கில் பங்குப் பணியாளராகப் பணியாற்றிய அருள்தந்தை நிக்கோலாசு அடிகள் நிருவாகத்தில் கி.பி. 1874 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1886 ஆம் ஆண்டு வரை கோயில் கட்டுமானப்பணி நடைபெற்ற போது அச்சுருபம் தென்னூர் ஆலயத்தில் நிருவப்பட்டது. மூன்று சுருபங்களுமே முக்கியமான அருளாட்சி செய்யும் இடங்களில் அமையப்பெற்றது சிறப்பானதாகும். ஒன்றானது நம் பங்கின் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சுருபங்களில் ஒன்று கடலூர் புதுவை மறைமாவட்டத்தில் (பாண்டி யூனியன் பிரதேசத்தில்) உள்ள வில்லியனூர் பங்கு ஆலயத்திலும் மற்றொன்று கும்பகோண மறைமாவட்டத்தின் முக்கிய திருத்தலமாக கருதப்படும் பூண்டி புதுமை ஆலயத்திலும் உள்ள சுருபங்களாகும். உலகப்புகழின் உச்சத்தில் உள்ள இரு ஆலயங்களும் அன்னையின் அருளாலும், புதுமையாலும் புகழினை அடைந்துள்ளது. புதுமைகள் மக்களால் சாட்சியங்களாக பரப்புரை செய்யப்பட்டுள்ளதே காரணமாகும். தென்னூரில் அருளாட்சி செய்யும் அன்னையால் நிகழ்ந்தேறிய நன்மைகளும், புதுமைகளும் நன்றி காணிக்கையோடு நிறைவுப்பெற்றதும், மக்களால் வெளி உலகில் சாட்சியங்களாய் பதியப்படாததுமே தென்னூர் அன்னையின் புகழ் அவனியின் செவியில் உணரப்படாமலே இருந்துள்ளது. அதனை உலகறிய செய்ய அன்னையின் அற்புதங்களை சாட்சியங்களை பதிப்பிக்க செய்ய வேண்டும். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பல பங்குகளும் ஆலயங்களும் மக்களின் உழைப்பிலும் உதவியாலும் உருவானது. அந்த வரிசையில் கி.பி. 1858 பிப்ரவரி 11ஆம் நாள் பிரான்சு தேசத்தில் லூர்து நகரில் பெர்னத் என்ற சிறுமிக்குக் காட்சி தந்த மரி அன்னையை தென்னூரின் காவலியாக மக்கள் தேர்ந்துகொண்டார்கள். அன்று முதல் லூர்து அன்னையின் ஆசிரும் அருளும் நிறைவாகப்பெற்று நிறை வாழ்வை நோக்கி தென்னூர் பங்கானது புதுவாழ்வினைக்கண்டு வருகிறது.
🔹ஆலய கொடிமரம்:
தென்னூர் லூர்து அன்னை ஆலயத்தில் முன்புறம் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரம் திருவிழா காலங்களில் புனிதர்களின் உருவங்கள் வரைந்த கொடிகள் ஏற்றி நவநாள்கள் சிறப்பிக்க அமைக்கப்பட்டது. கொடிகளில் ஏற்றி விண்ணில் பறக்கும் திருவிழாக்கால புனிதர்களின் அருள் கரத்தால் அந்த ஊர் காக்கப்படுகிறது என்பதை குறிக்கவும் அவர்களின் அருள் பார்வை ஊரெங்கும் படர்ந்துள்ளது எனவும் எடுத்துரைக்க ஆலயங்களில் கொடிமரங்கள் அமைக்கப்படுகிறது. புனிதக்கொடிகள் பறக்கவிடப்படுகிறது. தென்னூரில் கொடி மரம் அருள்தந்தை.தனிஸ்லாஸ் அவர்களின் காலத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டது. புதிய கொடி மரம் அருள்தந்தை.ம.பிலிப்பு சந்தியாகு அவர்கள் காலத்தில் ஓய்வு பெற்ற முப்படையினரின் நன்கொடை மூலம் வெண்கல தகடினால் கொடி மரம் அமைக்கப்படுவதற்கு 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் (08) எட்டாம் தேதி ஜெயங்கொண்ட மறைவட்ட முதன்மை குரு பேரருள்திரு. ரோச் அலெக்சாண்டர் மற்றும் அருள்தந்தையர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.பணிகள் விரைவாக நடைபெற்று 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 02ஆம் நாள் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைகுரு அமிர்தசாமி அடிகளார் மற்றும் மறைவட்ட முதன்மை குரு தேவதாசு அடிகளார் அவர்களால் கொடிமரம் புனிதப்படுத்தப்பட்டு லூர்து மாதாவின் திருக்கொடி ஏற்றப்பட்டது.
🔹லூர்து மாதா கெபி:
லூர்து நகரில் காட்சி தந்த அன்னையை போற்றும் வகையில் அவர் காட்சி தந்த நூறாவது ஆண்டை கொண்டாடும் விதத்தில் உலகெங்கும் இருக்கும் கத்தோலிக்க திருச்சபைகள் திருத்தந்தையின் அறிவுறுத்தலின் கீழ் மாதா கெபியை அமைத்தனர். நம் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் அருள்தந்தை. தனிஸ்லாசு அவர்களின் பணிக்காலத்தில் ஆசாரியார் குடும்பத்தினரின் நன்கொடையோடு மாதா கெபி அமைக்கப்பட்டது. அதனை கும்பகோணம் ஆயர் மேதகு.பீட்டர் ரெமிசியூசு அவர்கள் 11.02.2011 அர்ச்சித்து மக்கள் வழிபாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.
🔹ஆலய நுழைவு வாயில் :
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான்.14:6) என்ற நம் மீட்பரின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆலய வழி செம்மைப்படுத்தப்பட்டு ஆலயத்தின் நுழைவு வாயில் 2018 ஆம் ஆண்டு அருள்தந்தை. எம்.செல்வராசு அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டது. இருபுறம் தென்னூர் பாதுகாவலர்கள் திருஉருவம் இடம் பெற கலை நயத்துடன் ஆலய முகப்பினை நினைவுப்படுத்தும் விதமாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இக்கோபுரம் மேதகு ஆயர். அந்தோனிசாமி பிரான்சிசு அவர்களால் மே 16 ஆம் நாள் 2018 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது.
🔹 திருவிழாக்கள்:
✨பங்குத்திருவிழாக்கள் :
பொன்னான் ஆயர் அவர்கள் தேர்த்திருவிழாக்கள் பிற சமயத்தினரின் மனமாற்றத்திற்கும் மதமாற்றத்திற்கும் உதவும் என்று கருதினார். சப்பரம், தேர் ஊர்வலம் வரும்போது மறைப்பணியாளர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திருவிழாக்களில் தேர் கொண்டாடுவது காடுகளில் வளர்ந்திருக்கும் வெண்ணாங்கு மரத்தின் கிளைகளைக் கொண்டு வந்து மிகப்பெரியத்தேர் செய்வார்களாம். அந்த தேர்களுக்கு சக்கரங்கள் கிடையாது. ஆலமரத்தின் விழுதுகளால் ஆன மிகப்பெரிய தண்டுவடத்தின் துணைக்கொண்டு தேர்களைத் தூக்குவார்கள் என அறியமுடிகிறது. இத்தேர்கள் ஐந்து மற்றும் ஏழு என்ற எண்ணிக்கையில் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. பின்னர் சுருபங்கள் வைத்து தேர்த்திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. தென்னூரில் பங்குத்(ஊர்த்)திருவிழா, புனித செபத்தியார் திருவிழா (வாசகப்பா), திவ்ய நற்கருணை திருவிழா, தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
✨பொதுத்திருவிழாக்கள் :
பங்குத்திருவிழாக்கள் மட்டுமல்லாமல் கிறித்துவ திருவிழாக்களான கிறித்து பிறப்பு பெருவிழா, ஆங்கில புத்தாண்டு, உயிர்ப்பு பெருவிழா, மரியன்னை பிறப்பு விழா மற்றும் விண்ணேற்பு விழா இவைகள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் மக்களின் விசுவாசம் அறிக்கையிடப்படுகிறது.
✨காவலியாம் லூர்து மாதாவின் திருவிழா :
பங்குத்(ஊர்த்)திருவிழா லூர்து அன்னை காட்சி கொடுத்த பிப்ரவரி 11ஆம் தேதியை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஆண்டு தோறும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கொடியேற்றி நவநாட்கள் ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி இரவு அலங்காரத் தேர்பவனியுடன் அன்னைக்கு விழா எடுத்து பிப்ரவரி 11 ஆம் தேதி சிறப்பு திருப்பலியுடன் கொடி இறக்கம் செய்து திருவிழா முடிவடைகிறது. மின்விளக்குகளால் கோயில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மிளிரும். நவநாட்களில் திருப்பலியும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வானவேடிக்கைகளுடன் திருவிழா தேர்பவனி நடைபெறும். மக்கள் அவரவர்களின் நேர்த்திக்கடன்களை தெருத்தெருவாக கொண்டாடி ஊர் முழுவதும் அன்னைக்கு நன்றி செலுத்துவார்கள்.
🔹 புனித செபத்தியாரும் புகழ் பாடும் வாசகப்பாவும்:
வாசகப்பா:
வாசகம் + பா =வாசகப்பா. "வாசகம்" என்ற வடமொழிச்சொல்லும் "பா" என்ற தமிழ் மொழிச்சொல்லும் இணைந்து வாசகப்பா ஆனது. வசனமும் பாடலும் இணைந்த நாடகம் வாசகப்பா என அழைக்கப்படுகிறது. படித்தவர்கள் உரைநடை(வாசகம்)யை படித்துவிடுவார்கள் படிக்காதவர்கள் பாடலைக் (பா)கேட்டால் புரிந்துக்கொள்வார்கள் என்ற பயன்படுத்துதல் விதிமுறையால் நம் பங்கில் வாசகப்பாக்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. உலகத்தில் மனிதன் வாழ வேண்டிய நெறிகளையும் வாழக்கூடாத வழி முறைகளையும் சொல்ல உருவாக்கப்பட்ட மற்ற சமய இதிகாச புராண நாடகங்களைப் போல மறையைப்பரப்பவும் மக்களுக்கு கிறித்துவம் தொடர்புள்ள செய்திகளை அறிவிக்கவும் நாடகத்தன்மையும் கூத்தின் தன்மையும் கொண்ட வாசகப்பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ற வகையில் நடித்து மக்களுக்கு இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்தவே வாசகப்பாக்கள் உருவானது.
தென்னூர் மண்ணில் தோன்றிய தமிழ் இலக்கியம் முதன் முதலில் செபத்தியாரின் வாசகப்பா மூலமாகத்தான் வந்துள்ளது. இவ் வாசகப்பாவில் இடம் பெற்ற பாடல்கள் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம், தேவாரம். இன்னிசை, திரு கொச்சகம், கலிப்பா, தாழிசை எனும் பலவகைப்பாக்களாலும் செய்யுள் முடியும் வார்த்தையிலிருந்து அடுத்த செயுள் தொடங்கும் அந்தாதி முறையிலும் பாடல் இயற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. நம் தென்னூர் மண்ணில் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று நம் மக்களின் விசுவாசத்தின் சாட்சியாக அரங்கேற்றம் செய்யப்பட்டு வரும் புனிதரின் வாசகப்பாவை இயற்றியவர் காரை நகர் தமிழ் புலவர் அய்யாசாமி அவர்களின் மாணவர் சின்னசாமி புலவர் ஆவார். "காரைக்கால் வாத்தியார்" "நாடகவாத்தியார்" மற்றும் "வர கவி சின்னசாமி புலவர்" என அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். வரதையில் தங்கி வாசகப்பா எழுதும் போது பாடல்கள் சரியாக அமையாவிட்டாலோ எழுதுவதற்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டாலோ அலங்கார அன்னை ஆலயம் பின்புறம் உள்ள கல்லறைக்குச் சென்று தலையை முட்டிமோதி அழுது புலம்புவாராம். தலையில் குட்டிக் கொள்வாராம். உணவும் உறக்கமும் கொள்ள மாட்டாராம். இச்செய்தி வழிவழியாய் வரதை வாழ் முன்னோர்களால் சொல்லப்பட்டு வரும் செவிவழி செய்தியாகும் வாசகப்பா படைப்பதில் புலமைப்பெற்ற வல்லவர் ஆவார். அவரது படைப்பில் உருவான வாசகப்பாக்கள் நம் பக்கத்து கிராமங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றுள் 1903 ஆம் ஆண்டு காலவாக்கில் மருகிருதம்மாள் வாசகப்பா வரதை பங்கு இல்லத்தில் தங்கி அவரால் இயற்றப்பட்டதாகும். 1913 ஆம் ஆண்டில் ஆரோக்கியநாதர் வாசகப்பாவை எழுதியுள்ளார். அகினேசம்மாள் வாசகப்பா போன்றவை அவரால் எழுதப்பட்டவையாகும்.
தென்னூரில் வாசகப்பா :
தென்னூர் மக்களின் தளரா விசுவாசத்திற்கு சாட்சியாக விளங்கும் பாதுகாவலராம் புனித செபத்தியாரின் வாசக வடிவிலான வாழ்கை வரலாற்று நாடகம் காரை நகர் தமிழ் புலவர் அய்யாசாமி மாணவர் சின்னசாமி புலவர் அவர்களால் அருள் தந்தை நிக்கோலாசு அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய 1874 முதல் 1886 வரை காலங்களில் எழுதப்பட்டு அருள்தந்தை அருள்திரு.பெர்டைல் அடிகளார் காலத்தில் மங்களம் பாடப்பட்டு அரங்கேற்றபட்டது. புனிதரின் சுயசரிதை இன்றைய ஆண்டு வரை 150 ஆண்டுகளுக்கு மேலாக அரங்கேறி வருகிறது. வாசகப்பாவை ஊரின் முக்கிய பெரியோர்கள் வாசகப்பா ஆசிரியருக்கு அடைக்கலம் தந்து பொருள் தந்து ஊரிலே தங்க வைத்து வாசகப்பா எழுத காரணமாயிருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கிய பெரியோர்களாக இருந்த பங்கின் அருள்தந்தை. நிக்கோலாசு அடிகளார், திருவாளர்கள் மணியம் பொன்னு, தம்புசாமி கர்ணம், பாவலன் இரத்தினம், அய்யாவு படைராசர் இருந்தவர்களிடம் வந்தடைந்து வாசகப்பா இயற்றியதாகவும் மேலும் அருள்தந்தை. பெர்த்தாயில், திருவாளர்கள் முத்து மணியம், இரத்தின மணியம், அண்ணாசாமி. கர்ணம் அருள், வேதநாத பூபதி, சாமிக்கண்ணன், பெரியதம்பி, பெரியநாயக நாட்டார், சவரியப்பா ஆகிய பெரியோர்களால் வாசகப்பா வளர உழைத்தவர்கள் என்பன போன்ற தகவல்கள் படைப்பாசிரியர் அவர்களின் மங்களப்பாடல் மூலம் அறியக்கூடிய உண்மையாகும்.
கதைமாந்தர்கள் :
ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பார்கள். அதற்கேற்ப அறுபத்து நான்கு கலைஞர்கள் பங்களிக்க அறுபத்து நான்கு பாத்திரங்கள் அமைக்கப்பெற்றிருப்பது நம் வாசகப்பாவின் சிறப்பாகும். படைப்பாளரின் தனித்துவம் ஆகும். அனைத்து கதாபாத்திரங்களும் உள்ளூர் நடிகர்களை கொண்டு நடிக்கப்படுகிறது. அதில் பூத்தெளிப்பெண்கள், மந்திரிகள், அரசன். போர்ப்படைத்தளபதி, கட்டியங்காரன், காவலர்கள், கப்பல் மாலுமிகள், சிறைக்காவலர்கள். குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி, தம்பிரார், கோயில் பூசாரிகள், குறிசொல்பவர், சோயே, வாலர்கள், நடனமங்கைகள், ஆயர், அருள்கன்னியர்கள், கொலைஞர்கள், அலகைகள், பறையறைவோன்கள், வாலர் தந்தை, மனைவிகள், பிள்ளைகள், வானதூதர், வில்லாளர்கள், செபத்தியார் என அறுபத்து நான்கு கதாபதாத்திரங்களில் சிலவனவாகும். ஊரில் சில குடும்பங்கள் (சிலரை) வாசகப்பாவில் அவர்கள் ஏற்கும் கதாபாத்திரத்தை வைத்தே அழைக்கப்படுகிறது என்பது அந்த கதாபாத்திரத்தின் மாண்பினை குறிப்பதாக உள்ளது. இக்கதாபாத்திரங்கள் குடும்பம் குடும்பமாக தொடர்ந்து அவர்களின் வாரிசுகளால் நடிக்கப்பெற்று வருகிறது. பின்பாட்டு பாடக்கூடியவர்கள் மேடையில் நடிகரின் பின்புறம் அவர்களுக்கு பின் பாட்டு பாடுவார்கள். இது காலம் காலமாக தொடர்ந்து அவர்களின் வேடமிடாத குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள். பாத்திரமேற்று வேடமிட்ட நடிகர்கள், பின்னனி பாடகர்கள் மற்றும் அடியெடுத்து கொடுக்கும் அண்ணாவி தவிர்த்து அங்கே மேடையை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள் யார் என்ற வினா? வாசகப்பாவின் புனிதத்துவத்தை அறிந்தவர்களின் மற்றும் புனிதரின் சுயசரிதையை தெரிய துடிப்பவரின் சந்தேகமாகவே இருக்கிறது. பெண் நடிகர்கள் வாசகப்பாவில் இடம்பெறவில்லை. இது வாசகப்பா இயற்றப்பட்ட காலத்தின் சூழலுக்கு உகந்ததாக இல்லாத காரணத்தினால் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். புனிதரின் வாழ்வு பிரான்சிசு தேசத்தின் மேலை நாட்டுக்கலாச்சாரத்தில் நிகழ்ந்ததாகினும் நம் மக்களின் விசுவாசத்தை நிலைப்படுத்த நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப வேதகலாபனை காலங்களில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டதையும் அப்போது அவர்கள் கிறித்துவின் மேல் அசைக்கமுடியாத விசுவாசிகளாக இருந்ததையும் நமக்கு தெரியப்படுத்த அமைக்கப்பட்டதால் நம் தமிழ் கலாச்சாரத்தின் மன்னராட்சியை முன்னிருத்தி இந்து கிறித்துவம் என்ற சமய மாற்றத்திற்கு கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.
வாசகப்பாவின் முன் தயாரிப்பு :
வாசகப்பாவின் ஒத்திகை நிகழ்ச்சி தொடக்கத்தில் கர்ணம் தம்புசாமி அவர்களின் வீட்டில் எழுதி படிக்கப்பட்டது. அங்கேயே ஆண்டுதோறும் ஒத்திகை நடைபெற்றது. பின்னர் வாசகப்பா ஏடுகள் களவாடப்பட்டதால் அவை கண்டுபிடிக்கப்பட்டு பங்குத்தந்தை வசம் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தற்போது ஆலய வளாகத்திலேயே நடைபெறுகிறது. வாசகப்பாவிற்கு முன்பே "அடுக்கு படித்தல்" எனப்படும் ஒத்திகை நிகழ்ச்சி ஆண்டு தோறும் தவக்காலத்தின் இரண்டாம் வெள்ளி முடிவுப்பெற்ற செவ்வாய் கிழமை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நாடக நடிகர்கள் பாடல் பாடி இரவில் மூன்று நான்கு மணி நேரம் என தொடர்ந்து சுமார் 30 நாட்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். இது புதிய நடிகர்களுக்கு பயிற்சியாகும் பழைய நடிகர்கள் இன்னும் சிறப்பாய் பங்கு பெறும் வாய்ப்பாக உடலசைவு பயிற்சியும், குரல் பயிற்சியும், பாடல் பயிற்சியும் மேற்கொள்வது முன் தயாரிப்பாக அமையும்.
வாசகப்பாவின் சிறப்பு :
வாசகப்பா என்றாலே தென்னூர் மக்களுக்கு சிறப்பு தான், பூரிப்பு தான். பங்கின் துணை காவலராய் புனித செபஸ்தியாரை தேர்ந்துக்கொண்டதிலிருந்து மக்களிடம் புனிதரின் பக்தி மேலோங்கியுள்ளது என்பதின் சான்றாகும். புனிதரிடம் கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதே விசுவாசத்தின் சிறப்பாகும். வாசகப்பாவில் மாற்குசு, மார்செலியான்சு (வாலர்கள்) கொல்லப்படுதல், வானதூதர் வருகை, செபத்தியாருக்கு அம்பு இடுதல் போன்றவை நாடக அமைப்பில் நுட்பங்கள் கலந்த அரங்கேற்றங்கள் என்பது நாடகத்தின் சிறப்புகளாகும். தமிழ் பண்பாட்டின் தமிழ் குடும்ப முறைகள் மன்னராட்சியின் அரசியல் அமைப்பு நெறிகள், அதற்கான ஆடைகள், அணிகலன்கள், ஒப்பனைகள், நாடகப்பாத்திரங்களின் நகைச்சுவை பாடல்கள், செய்கைகள், வீரமிக்க வசனங்கள், கலங்கி தவிக்கும் விழி நிரப்பும் கண்ணீர் காட்சிகள் பாடலுக்கு ஏற்ற எதுகை மோனைச் சந்தங்கள் அமைந்திருப்பது வாசகப்பா ஆசிரியரின் சிறப்பாகும். கம்பீரக்குரல், கர்ச்சிக்கும் குரல். வெண்கலக்கரல், வெள்ளிக்குரல், சிம்மக்குரல், சிகிலாய்க்கும் குரல், சிநேகித குரல், சிணிங்கிடும் குரல் என ஏற்ற இரக்கம் காட்டி உடல் நெளிவுகளும் வசன தெளிவுகளும் நிரப்பி பாட்டு பாடி நடிப்பது வாசகப்பா நடிகர்களின் சிறப்பாகும். இவைகள் அனைத்தும் விசுவாசத்திலிருந்து மக்கள் விலகிவிடாமல் காக்கும் ஆண்டவரின் அருங்கொடைகளாக, அற்புதங்களாக, கடவுளின் ஆசிரோடு, கற்பனையோடு புனிதரின் வரலாற்றை வாசகப்பாவாக அமைத்த ஆசிரியர் மற்றும் தென்னூர் மண்ணில் வாசகப்பா நிகழ காரணமான முன்னோர்களின் சிறப்பாகும்.
நிகழும் நாள் :
புனித செபஸ்த்தியாரின் மறைசாட்சியான வாழ்க்கை வாசகப்பா(நாடகம்) வடிவில் ஆண்டு தோறும் உயிர்ப்பு ஞாயிறு முடிந்து வரும் செவ்வாய்க் கிழமை தொடங்கி ஞாயிற்று கிழமை வரை தொடர்ந்து முடிவுறுகிறது. இரவில் ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலையில் நிகழ்வுறும் வகையில் வாசகப்பா காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.மழைக்கும் மருந்தாகவும், தீரா நோய்களுக்குத் தீர்வாகவும், பெருவாரி காய்ச்சல் அம்மை போன்ற நோய்கள் அண்டாமல் இருப்பதற்காகவும் வாசகப்பா அரங்கேறும் ஐந்து நாட்களும் மக்கள் பெரும் வெள்ளமெனத் திரண்டு புனிதரிடம் மன்றாடியும், நன்றி கூறியும், நேர்த்தி கடன்களை நிறைவேற்றியும் புனிதரின் புகழ் பாடிக் கொண்டாடுகிறார்கள். புனிதமிக்க இந்த அனுபவம் தென்னூர் மற்றும் சுற்று வட்டார மக்களின் விசுவாச வாழ்விற்கு இன்று வரை சான்றாகும். வாசகப்பா காலங்களில் வாசகப்பா மேடைகளில் மக்கள் தங்கள் வேண்டுதல்களுக்காகவும், நன்றியறிதல்களுக்காகவும் அன்னதானம் இட்டும், கஞ்சி ஊற்றியும் பசியாற்றி வருகிறார்கள்.
வாசகப்பா நிகழும் இடம், கதைக்களம், தனித்துவம் மற்றும் புனிதத்துவம் :
புனித செபஸ்த்தியாரின் மறைசாட்சியான வாழ்க்கை வாசகப்பா(நாடகம்) வடிவில் ஆண்டு தோறும் தென்னூர் பங்கில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. ஆலயத்தின் எதிர்புறம் உள்ள அதற்கென அமைக்கப்பட்ட மேடையில் ஆண்டு தோறும் வாசகப்பா சகப்பா அரங்கம் அமைக்கப்பட்டு அந்த இடத்தில் நடைபெறும். வாசகப்பாவின் போது கிறிஸ்த்துவ கதாபாத்திரங்களுக்கு தனியாகவும் இந்துத்துவ கதாபாத்திரத்திற்கு தனி இடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. தென்னூர் வாசகப்பாவின் கதை மறைசாட்சியாய் மரித்த புனித செபஸ்த்தியாரின் வாழ்க்கை வரலாற்றைக் கருவாகக்கொண்டதாகும். இந்நிகழ்வே ஆண்டாண்டாய் அடை மழையாயினும், பெரும் இடராயினும் அரங்கேற்றி வருகிறார்கள். வாசகப்பாவின் தொடக்கநாளில் திருப்பலியில் பங்கு கொண்டு வாசகப்பாவில் சிறப்பாக பங்குபெறவும் புனிதரை தேடி வரும் மக்களின் மன்றாட்டுகள் நிறைவேற இயேசுவையும் மாதாவையும் மன்றாடி திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். அதே போல் வாசகப்பா முடிவுறும் நாளில் நல்ல குரல்வன்மையை கொடுத்தமைக்காகவும் தம் பாத்திரத்தில் சிறப்பாக பங்கெடுத்தமைக்காகவும் நன்றியாகவும் இதே வாய்ப்பினை மீண்டும் வழங்கும் படியாகவும் தங்கள் கதாபாத்திரத்தின் உடையினிலே சென்று திருப்பலியில் வாசகப்பா நடிகர்கள் பங்கு கொள்வார்கள். புனித செபஸத்தியாரின் வாசகப்பாவில் மன்றாடி பலஅற்புதங்களும் புதுமைகளையும் புனிதர் வழியாக மக்கள் பெற்றுள்ளனர். அதற்கு நன்றியாகவும் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்துவதும் மக்கள் மேகமென திரண்டு, மழையென பொழிந்து, வெள்ளமென திரண்டு, புனிதரை வணங்குவதும், புனிதர் புகழ் பாடுவதும், நன்றி கூறுவதும் ஆண்டாண்டாய் தொடரும் புதுமைமிக்க புனிதச்செயல்களாகும்.
🔹தென்னூர் பங்கின் சிறப்புகள் :
மண்ணின் பெருமை :
ஓரியூர் மண்ணில் தலைவெட்டுண்டு அம்மண்ணுக்கு புதுமையும், பெருமையும் கொணர்ந்த புனித அருளானந்தர் பணிசெய்த இடமென்று சொல்வதில் தென்னூர் மக்கள் பெருமைக்கொள்ள வேண்டும். நம் கிறித்துவ நெறிக்கு இடுக்கண் வரும்போதெல்லாம் கட்டிகாக்க விசுவாசவாழ்வில் அர்ப்பணம் ஆக வேண்டிய பெருமை கொண்ட இடம் ஆகும்.
மண்ணில் தோன்றிய துறவறத்தார்கள் :
தேவ அழைத்தல் இறைவனின் அன்புக்கு அடையாளம். இறைவனின் அந்த அன்பு தென்னூர் பங்கில் முழுமையாக உள்ளதன் அடையாளமாக உருவாகியுள்ள குருக்களும், கன்னியர்களுமே சான்றுகளாகும். தென்னூர் பங்கில் இருந்து விசுவாச வாழ்வின் சான்றுகளாக தோன்றிய அருள்பணியாளர்கள் மறைமாவட்ட பணித்தளங்கள், வட மாநிலங்கள், மேலை நாடுகள் என சென்று கல்வி கூடங்கள், காப்பகங்கள், மருத்துவ இல்லங்கள், மறைப்பரப்பு பணிகள் என இயேசுவின் சிலுவை சுமந்து உலகின் எல்லை வரை சென்று இயேசுவின் மீட்பு பணியை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். அவர்கள் சுமார் 58 மேற்பட்ட அருள்குருக்களும், 200க்கும் மேற்பட்ட அருள் கன்னியர்களும் ஆவார்கள். இந்த திருச்சபையின் விழுதுகளாக உலகெங்கும் நிழல் பரப்பும் மண்ணின் மைந்தர்கள் பங்கின் சிறப்பானவர்கள் ஆவார்கள். பல சிறப்புகளுக்கு காரணமானவர்கள் ஆவர்.
திருப்பயணங்கள்:
மக்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும், நன்றிகளோடும் விரதம் இருந்து காவி உடையணிந்து நடைபயணமாய் பல ஆலயங்களுக்குச்செல்கின்றனர். குறிப்பாக மக்களின் பக்திமுயற்சி 1729 ஆம் ஆண்டு ஏலாக்குறிச்சியில் திருவிழா தொடங்கிய காலம் தொட்டு தென்னூர் பகுதி மக்கள் ஏலாக்குறிச்சி திருவிழாவில் திருப்பயணமாய் சென்று பங்கு கொண்டுள்ளனர். தற்போது மாதா பிறந்த மாதமான செப்டம்பர் மாதத்திலும், தவக்காலத்தின் இறுதி நாள்களிலும் வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கும், ஜுன் மாதத்தில் மேல் நாரியப்பனூர்(சின்ன சேலம்) புனித அந்தோணியார் ஆலயத்திற்கும், ஆகஸ்ட் மாதத்தில் கல்பட்டு(விழுப்புரம்) புனித வனத்துசின்னப்பர் ஆலயத்திற்கும், ஜனவரி மாதத்தில் கோணான்குப்பம் (மங்கலம்பேட்டை) பெரியநாயக அன்னை ஆலயத்திற்கும் திருப்பயணமாகவும் நடைபயணமாகவும் மாட்டுவண்டிகளோடும்,இயந்திர வாகனங்களோடும் சென்று மக்கள் தங்கள் விசுவாசத்தையும் வேண்டுதல் நன்றியறிக்கைகளையும் ஒப்புக்கொடுக்கின்றனர். மக்கள் விரதம் இருந்து அன்னதானமும் காணிக்கைகளும் செலுத்தி தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
🔹பங்கில் உள்ள சேவை மையங்கள் :
✨பங்கில் உள்ள பக்த சபைகள் :
பங்கின் வளர்ச்சிக்காகவும் ஆன்ம வளர்ச்சிக்காகவும் பங்கு பேரவை, அன்பியங்கள், மரியாயின் சேனை, பீடச்சிறுவர்கள், மறைக்கல்வி, கலைக்குழுக்கள் இளைஞர் இயக்கங்கள் போன்றவை சிறப்பாக செயல்பட்டு மக்களின் விசுவாச வாழ்விற்கும் பொருளாதார வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கான வழியினை ஏற்படுத்தி தருகின்றன.
✨பங்கில் உள்ள பிற நிறுவனங்கள் :
பங்கின் வளர்ச்சியில் தம் பங்களிப்பையும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பள்ளிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. தென்னூர் பங்கில் மாமரி துவக்கப்பள்ளி, வளனார் துவக்கப்பள்ளி, அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பள்ளிகள் அதற்காக விடுதிகள் செயல்படுகின்றன. சுப காரியங்களுக்காக அன்னை செபா சமுதாய கூடம் பங்கினால் மேலாண்மை செய்யப்படுகிறது. சமுதாய கூடம் மக்களின் இல்ல காரியங்களுக்காக உற்றார் உறவினர் நண்பர்களோடு களிகூறும் இடமாக தங்கள் இல்ல நிகழ்வுகளை நிகழ்த்திக்கொள்ள அமைந்துள்ளது.
தூய இதய கன்னியர் இல்லம் :
பெண்களின் கல்விக்காய் 1844 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் புதுவை மறைமாநிலத்தில் அருள்தந்தை லூயிசு சவேனியன் துப்புயி அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்டது மரியன்னையின் தூய இதய பிரான்சிசுகன் கன்னியர் சபை. இச் சபையின் கிளையாய் தென்னூரில் விதையாகி விருட்சமாக நிற்கிறது இச்சபையின் கன்னியர் இல்லம். தென்னூரில் இக்கன்னியர் இல்லம் அருள்தந்தை மதலைநாதர் அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி உருவானது. கன்னியர் இல்லம் தோன்றிடும் முன்னே கல்வி நிலையம் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி துவக்க நிலையில் சிறுமியர் கல்வி பயில வேண்டும் எனும் நோக்கில் ஆரம்ப பள்ளியாக செயல்பட்டது. தென்னூர் பகுதியில் இருந்த இத்துவக்கப்பள்ளியை நிர்வகிக்க, கற்பித்தல் பணி செய்ய வரதராசன்பேட்டையில் 1905 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட புதுவை திரு இருதய சபைக்கன்னியர்கள் பணியாற்றினர். அருள்சகோதரி.கிறித்தோப்மேரி அவர்களால் 1969-1973 ஆண்டுகளில் புதியதாக இடம் வாங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் இக்கன்னியர் இல்ல சகோதரிகள் கும்பகோண மறைமாவட்ட ஆயர் டி.பவுல் அருள்சாமி ஆண்டகை மற்றும் தென்னூர் மக்களின் வேண்டுகோளுங்கிணங்கி அன்னை லூர்து உயர்நிலைப்பள்ளிக்கு பொறுப்பேற்க ஒப்புக்கொண்டனர். அன்று முதல் இன்று வரை ஏற்றபணியை சிறப்பாக செய்து வருகின்றனர். கன்னியர் இல்லத்தில் உள்ள கன்னியர்களால் பள்ளி திறம்பட செயல்பட்டு மக்களின் ஒத்துழைப்போடு மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியர் இல்லத்தில் பணியேற்கும் கன்னியர்கள் மாணவிகளின் கல்வி, மக்களின் செபத்தேவைகள் மற்றும் வழிபாட்டு உதவிகளுக்கு பங்குத்தந்தையோடு உதவிபுரிகிறார்கள். யாருமில்லாத மாணவிகள், ஏழைகள் இவர்களை இனம் கண்டு உதவிகள் புரிந்து வருகிறார்கள். கன்னியர் இல்லம் அமைந்தது, தென்னூரின் வளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தின் விதையென. காலத்தின் நகர்வுகளை பின்னோக்கி பார்த்தால் .... பெண்களின் வளர்ச்சியிலும்,மக்களின் ஆன்மீக வளர்ச்சியிலும் துணைநின்றது என்பதற்கான சான்றுகள் தெளிவுப்படும்.
அன்னை செபா சமுதாயக்கூடம் :
அருள்தந்தை வி.ஐ.பீட்டர் அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் இடமின்றி சுபநிகழ்வுகளில் சொந்தங்களை சுற்றங்களை வர வைத்து உபசரிக்க விசாலமான மனமிருந்தும் இடமில்லாத தென்னூர் மக்களின் குறைபோக்க பாதுகாவலர்களாம் லூர்து அன்னை மற்றும் புனித செபத்தியாரின் நினைவில் "அன்னை-செபா" என பெயரிடப்பட்டு சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டது. இதற்கு வாசகப்பா குழுவினர், உபகாரிகள், மண்ணின் மைந்தர்கள் மற்றும் பங்கு மக்கள் உதவியுடன் கட்டுமானப்பணிக்கான நிதி பெறப்பட்டு கட்டப்பட்டது. இதன் மூலம் மக்களின் ஒரு குறை அகற்றப்பட்டது. இன்று இப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் இல்ல நிகழ்வுகளுக்கு குறைந்த பொருளாதார செலவில் நிறைந்த வசதிகளுடன் பயன்படுத்துவோர் மனமகிழ மனநிறைவாய் பயன்பாட்டில் உள்ளது என்பது சிறப்பாகும்.
நிழல் கொடுத்த சலேசியம், இளைப்பாறிய தென்னூர் :
🔹தென்னூர் மறைப்பணித்தளமும், தந்தையர்களும் :
✨மறைப்பணித்தளங்கள்:
கிறித்துவக்குடும்பங்கள் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து அதனை நிர்வாகம் செய்யவும்,அருள்சாதனங்கள் வழிபாடுகள் மேற்கொள்ளவும் மறைப்பணியாளர் தங்கி பணி செய்ய உகந்த இடமாகவும் உருவாக்கப்பட்ட இடப்பகுதி மறைப்பணித்தளங்களாகும். இதனை நிர்வகிப்பவர்கள் மறைப்பணியாளர்கள் ஆவார்கள்.
✨தென்னூர் மறைப்பணித்தளம் :
புதிய விக்காரியேட்டாக 1836 ஆம் ஆண்டு புதுச்சேரி உயர்த்தப்பட்ட பின்னர், வரதராசன்பேட்டை (தென்னூர்) அதனைச் சேர்ந்த பணித்தளமாக இருந்தது. வரதராசன்பேட்டை(தென்னூர்) 1836 ஆம் ஆண்டு கோவா குருக்கள் வசம் இருந்துள்ளது 1838. 1839 களில் ஆரம்பித்த ஆயர் பொன்னான் அவர்களின் மறைப்பணித்தளங்களின் பார்வையிடல் பயணத்தின் மூலம் 1844 ஆம் ஆண்டு எரையூர், அய்யம்பேட்டை, புதுப்பாளையம், தென்னூர், விரியூர், கும்பகோணம் பணித்தளங்களை பார்வையிட்டுள்ளார். அப்.விக்கர் பொன்னான் ஆயர் காலத்தில் புதிய பங்காக 1846 ஆம் ஆண்டு தென்னூர் பங்கு உதயமானது. மக்கள் எண்ணிக்கை 3000 மாக இருந்தது. வரதராசன்பேட்டைக்கு தென்னூர் (தெற்கு) பகுதி மக்கள் அவ்வப்போது சேசு சபை குருக்களின் வேதபோதகத்தில் நடைபெறும் வழிபாட்டிலும், திருப்பலியிலும், திருவருட்சாதங்களிலும் பங்கேற்று வந்தனர். தென்னூர் (தெற்கு) பகுதி மக்களின் வருகையை விரும்பாத சிலரிடம் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக 1846 ஆம் ஆண்டு கோவிலானூர் சென்று ஆண்டகை அவர்களை சந்தித்து தனி குருவானவரைப் பெற்று வந்துள்ளனர். மக்களின் ஆன்மீகத் தாகத்தினாலும் மக்கள் தொகை பெருக்கத்தினாலும் குருக்கள் திருப்பலிக்காகவும் திருவருட்சாதனங்களை வழங்குவதற்காகவும் போக்குவரத்து இல்லாத சூழலிலும் வந்து சென்றுள்ளார்கள். தென்னூரில் (தெற்குபகுதி) குடியிருந்த மக்கள் திருப்பலிக்காக மிசினரி குருக்கள் வந்து போக போக்குவரத்து சாதனங்களோ சரியான பாதைகளோ கிராமங்களை இணைக்ககூடிய சாலைகளோ இல்லாத காலச் சூழலிலும் வரவழைத்து திருவருள் சாதனங்களையும், வழிபாடுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என அறிவதன் மூலம் அவர்களின் அன்றைய விசுவாச வாழ்வினை உணர முடிகிறது. தம் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆயர் அவர்கள் தலைமையகம் சென்ற பின் புதிய பங்காக 1846 ஆம் தென்னூரை அங்கீகரித்திருக்கலாம்.ஆயர் அவர்களின் 1899 ஏப்ரல் 21 ஆம் நாளைய சுற்றுமடலில் 28 கும்பகோணம் மறைமாவட்ட பங்குகளை குறிப்பிட்டுள்ளார் அவற்றில் தென்னூர் பங்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔹தென்னூர் பங்கின் பங்குத்தந்தையர்கள் :
📍அருள்திரு.சே.அலோசியசு (1846 - 1856)
📍அருள்திரு.மரிய சவேரி (19.10.1856 - 18.01.1874)
📍அருள்திரு.நிக்கோலாசு (14.05.1874 - 01.08.1886)
📍அருள்திரு.மரிய ஆரோக்கியம் (27.09.1886 - 07.09.1891)
📍அருள்திரு.மைக்கேல் (01.11.1891- 28.08.1892)
📍அருள்திரு.மொரேல் (01.10.1892 - 16.09.1894)
📍அருள்திரு.பொனு பவுண்ட் (02.12.1894 - 16.01.1899)
📍அருள்திரு.பெர்டைல் (17.01.1899 - 11.02.1906)
📍அருள்திரு.மெர்சியர் (18.06.1906 - 31.05.1914)
📍அருள்திரு.சோவிக்னட் (07.06.1914 - 29.12.1919)
📍அருள்திரு.அ.ச.லூர்தசு (24.01.1919 - 10.01.1927)
📍அருள்திரு.மதலை நாதர் (18.01.1927 - 15.05.1935)
📍அருள்திரு.அ.பெ.ஆரோக்கியசாமி(26.05.1935 - 13.10.1938)
📍அருள்திரு.அருள்நாதர் (13.10.1938 - 13.10.1945)
📍அருள்திரு.அ.எசு.லூர்தசு (13.10.1945 - 30.09.1946)
📍அருள்திரு.எம்.தாவீது நாதர் ( 30.09.1946 - 22.07.1948)
📍அருள்திரு.அ.அந்தோணி சாமிநாதர் (22.09.1948 - 02.08.1958)
📍அருள்திரு.எம்.லூர்தசு (02.08.1958 - 18.10.1969)
📍அருள்திரு.சாந்தப்பர் (18.10.1969 - 12.08.1973)
📍அருள்திரு.எசு.செல்வராசு (28.10.1973 - 23.09.1981)
📍அருள்திரு.ஜோசப் (24.09.1981 - 18.10.1982)
📍அருள்திரு.ஆர்.வின்சென்ட் பெரர் (18.10.1982 - 24.07.1987)
📍அருள்திரு.ஆர்.சவரிமுத்து (24.07.1987 - 03.06.1995)
📍அருள்திரு.எம்.தனிசுலாசு (04.06.1995 - 08.06.2001)
📍அருள்திரு.எம்.மரிய தனராசு (07.06.2001 - 2006)
📍அருள்திரு.வி.ஐ.பீட்டர் (2006 - 2011)
📍அருள்திரு.ம.செல்வராசு (2011 - 09.08.2018)
📍அருள்திரு.ம.பிலிப்பு சந்தியாகு (10.06.2018...)
📍அருள்திரு.மாற்கு மார்சியுஸ் (பொறுப்பு தந்தை)
📍அருள்திரு.லியோ டோமினிக்ஸ் நெல்லூஸ் ராஜா (17.07.2021 - 08.06.2025)
📍அருள்திரு.ஜான்கென்னடி (08.06.2025 -)